thiraippadam.com logo

tamil movie database
தமிழ்
Home   Movies   Stars   Members  
               
Movie Review: Sivakasi (2005) Back to Movie
Rate movie மீனாக்ஸ் விமர்சனம்
Fans Rating: 81%%81%% 81% (161 votes)
Movie Still மாஸ் ஹீரோ என்ற ராஜபாட்டையில் விஜய் விறுவிறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் பயணத்தில் இன்னுமொரு முக்கிய மசாலா கொத்து பரோட்டா மைல்கல் தான் சிவகாசி.

ரசிகர்கள், தாய்க்குலங்கள் ஆகிய இரு பெரும் டார்கெட் ஆடியன்ஸைக் குறி வைத்திருக்கிறார்கள். முதல் பாதி ரசிகர்களுக்கு. சிவகாசிப் பட்டாசு வெடி வெடி என்று அதிரடியாய் வெடிக்கிறது. இரண்டாம் பாதி தாய்க்குலங்களுக்கு. உருக்கோ உருக்கு என்று சென்டிமென்ட்டில் உருக்கித் தள்ளுகிறார்கள். இரண்டையும் நகைச்சுவை கலந்து பறிமாறியிருப்பதே பார்வையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது.

தி.நகர் ரங்கனாதன் தெருவில் வெல்டிங் ஷாப் வைத்திருக்கும் 'அநாதை' சிவகாசி. (அந்தத் தெருவில் வெல்டிங் ஷாப்புக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை. கஸ்டமர்கள் வருவதற்கும் போவதற்கும் ரொம்பச் சிரமமாயிருக்குமே..!!) ஆதிகேசவன் ஸ்டைலில் மார்பில் தங்க நகைகள் புரள வலம் வரும் பல்லாக்கு பாண்டி என்ற ரவுடியை அடக்கும் விதமாக சண்டையில் பொறி கிளப்பி அறிமுகமாகிறார் விஜய். கடையின் ஷட்டரை வெல்டிங் செய்து உடைத்து அவர் வெளியே வரும் முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்கு அல்வா சாப்பிட்ட திருப்தி. அட்டகாசம்.

பணக்காரப் பெண் அஸினுக்கும் அவருக்கும் சில உரசல்கள், சில சவால்கள். அந்த சில காட்சிகள் முடிந்து பார்த்தால் இருவருக்கும் லவ்ஸ். நடுவில் 'பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்' போன்ற கொள்கை விளக்க வசனங்கள், 'ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை, போலீஸா இருந்தாலும் நீங்க பொம்பளை, அவனை நீங்க அடிச்சிருக்கக் கூடாது' போன்ற கேனத்தனமான பெண்ணிய எதிர்ப்பு வசனங்கள். அதையெல்லாம் தாண்டி இடைவேளைக்கு வந்து சேரும் போது தெரிகிறது, விஜய் ஒரு அநாதை அல்ல என்ற திடுக்கிடும் திருப்பம்.

சின்ன வயதில் அண்ணன் செய்த தவறுக்கு பழி ஏற்று வீட்டை விட்டு துரத்தப்பட்டவர் விஜய். அப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் நினைவுகளை மறக்க அவர் அணிந்த வேடம் 'அநாதை'. குடும்பத்தோடு வந்து பெண் கேட்டால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று அஸின் சொல்லிவிட இழந்த குடும்பத்தை மீட்க சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்குப் புறப்படுகிறார் விஜய். அங்கே தானய்யா சென்டிமென்ட்டும், நகைச்சுவையும் வந்து சேர்ந்து கொள்கிறது. விறுவிறுப்பாக பட்டையைக் கிளப்பி க்ளைமாக்ஸ் வரை அலுக்காமல் கொண்டு போய் முடிக்கிறார் பேரரசு.

சவாலான கேரக்டர், கஷ்டமான காட்சிகள் இப்படியெல்லாம் தன்னைத் தானே வருத்திக் கொள்ளாமல், தனக்கென ஒரு எளிமையான பாதையை வகுத்துக் கொண்டுள்ளார் விஜய். அதை மிகவும் திருப்திகரமாகச் செய்து முடிக்கும் சூரத்தனம் அவருக்கு அளவில்லாமல் இருக்கிறது. காமெடி, நடனம், சண்டைகள், சென்ட்டிமென்ட், காதல் என்று சகலத்திலும் புகுந்து புறப்படுகிறார். தமிழ் முரசு மாதிரி நச்சென்று செய்து முடிக்கிறார். எததனை நாளுக்கு இப்படியே ஓட்ட முடியும் என்ற கேள்வியை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய பங்களிப்பு மிகப் பிரமாதம்.

அஸினுக்கு ஒரு வழக்கமான கதாநாயகி வேலை. அளவோடு செய்திருக்கிறார்.

கிராமத்து அண்ணனாக, கேப்மாறித் தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக வரும் பிரகாஷ்ராஜ், ஊரில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தாயையும் தங்கையையும் கவனிக்காமல் அட்டூழியம் பண்ணிக் கொன்டிருக்கிறார். நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை அம்சமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அம்மாவையும் தங்கையையும் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்த பிறகே தான் யார் என்ற உண்மையைச் சொல்லப் போவதாக விஜய் முதலிலேயே தேவையில்லாமல் முடிவு செய்து விடுவதால் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்.

குறிப்பாக பிரகாஷ்ராஜின் எடுபிடிகளாக வருகின்ற இரண்டு பேர் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். விஜய் ஒரு கடிதத்தை வைத்து பேரம் பேசும் போது, "ஒண்ணு", "ரெண்டு", "நாலு" என்று பேசிக் கொன்டிருக்கும் போது எடுபிடி உள்ளே நுழைந்து, "அண்ணே, என்ன இது சில்லறைத்தனமா? பத்துன்னு ரவுண்டாப் பேசி முடிங்க" என்று சொல்வதும், பிரகாஷ்ராஜ் அவரிடம், "சரி, பத்து கொண்டு வா" என்று அவரை அனுப்பி விட்டு, "ஆனாலும் இந்தக் கடுதாசிக்கு பத்தாயிரம் ரொம்ப அதிகம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் ஒரு பெட்டியுடன் வருவதும், "எதுக்கு பெட்டி?" என்று விசாரிக்க, "பெறவு? பத்து லட்சத்தைப் பெட்டியில போட்டுத் தானே கொண்டு வர முடியும்" என்று சொல்வதும், "பத்து லட்சமா? நான் பத்தாயிரம் தானேடா சொன்னேன்" என்று அவர் மிரட்சி கொள்வதும், எடுபிடி அதற்குப் பதிலாக, "அந்த எழவைப் பத்தாயிரம்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? ஒண்ணு ரென்டு மூணுன்னு ஒண்ணாங்கிளாஸ் மாதிரிச் சொல்லிக்கிட்டிருந்தா எனக்கு என்ன வெளங்கும்?" என்று பட்டாசு கொளுத்திப் போடுவதும் மிக சுவையான நகைச்சுவை. தியேட்டர் அதிர்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா, தனது பிண்ணனி இசை மூலம் சண்டைக் காட்சிகளுக்கு நெருப்பு மூட்டியிருக்கிறார். அஸினிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் காதலைப் பற்றிச் சொல்லும் போது விஜய், "இது உங்க காதல், எங்க காதல் இல்லை, ங்கொக்காமக்கா காதல்" என்று சொல்வார். அதைப் போல் பாடல்களில் ஸ்ரீகாந்த் தேவா போட்டிருக்கும் குத்து, "உங்க குத்து, எங்க குத்து இல்லை, ங்கொக்காமக்கா குத்து." அப்படி ஒரு கும்மாங்குத்து போட்டு குமுறியிருக்கிறார். "தீபாவளி தீபாவளி" பாட்டில் அலுமினிய டம்ளர் முதற்கொண்டு டிரம்ஸ் வரை சகலத்தையும் போட்டு அடி பின்னியெடுத்திருக்கிறார். "வாடா வாடா", "கோடம்பாக்கம்" ஆகிய பாடல்களும் கேட்பவர்களை முறுக்கேற வைக்கும் வண்ணம் இருக்கின்றன.

அம்மா மீதான அன்பும், தங்கை மீதான பாசமும் வெளிப்படுத்தும் காட்சிகளில் விஜய் பொருத்தமான முக பாவங்களோடு சிறப்பாக செய்திருக்கிறார். தங்கையின் மகளாக ஒரு சிறுமி மனதைக் கவர்கிறாள்.

இயக்குனர்களில் இரண்டு வகை உண்டு. ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் ஒரு வகை. மாஸ் ஹீரோ என்ற ஆளுமைக்கு ஆசைப்படும் நாயகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் இன்னொரு வக. இயக்குனர் பேரரசு, தெளிவான இரண்டாம் வகைக்காரர். கே.எஸ்.ரவிக்குமாரின் சென்டிமென்ட் மசாலா பிராண்டை கையகப்படுத்திக் கொண்டு கொஞ்சம் நகைச்சுவையைத் தூக்கலாகத் தூவிவிருந்து படைப்பதில் அவர் சமர்த்தர்.

அஜீத் ரசிகர்கள், நம்பிக்கையோடு 'திருப்பதி' திரைக் காவியத்தை எதிர்பார்க்கலாம்.

Rate movie மீனாக்ஸ் விமர்சனம்