thiraippadam.com logo

tamil movie database
தமிழ்
Home   Movies   Stars   Members  
               
Movie Review: Gajini (2005) Back to Movie
Rate movie மீனாக்ஸ் விமர்சனம்
Fans Rating: 86%%86%% 86% (269 votes)
Movie Still 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்று சொல்வார்கள். ஹாலிவுட் திரைப்படமான 'தி மெமெண்டோ'-வின் திரைக்கதையை சுட்டு சுவராக்கி, அதன் மேல் தனது சித்திரத்தை வரைந்திருக்கிறார் முருகதாஸ். ஆங்கிலப் படம் கொஞ்சம் அறிவுப் பூர்வமாக அணுக வேண்டிய அவசியமுடையது. இதில் அந்தளவுக்குக் குழப்பிக் கொள்ளாமல் உணர்வு பூர்வமாக அணுக முயன்றிருக்கிறார்.

'குறைந்த கால நினைவிழப்பு' (Short term Memory Loss) என்ற தன்மையை உடையவராக அறிமுகமாகிறார் சூர்யா. எடுத்த எடுப்பிலேயே கொலை செய்கிறார். மருத்துவக் கலூரி மாணவியான நயன் தாரா, அவரைப் பற்றி ப்ராஜெக்ட் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால், 'வேண்டாம்' என கல்லூரிப் பேராசிரியரால் அறிவுறுத்தப்படுகிறார். என்றாலும் சூர்யாவின் பின்னணி குறித்து ஆராய முற்படுகிறார். கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ரியாஸ் கான் இன்னொரு பக்கம் சூர்ய்வாவின் பின்னணியை ஆராய்கிறார். இவர்களின் மூலம் சூர்யாவின் முன் கதை நமக்குக் காட்டப்படுகிறது. சூர்யா-அஸின் காதலும், அவரது நினைவிழப்புக்கான காரணமும் தெரிய வருகிறது. நடுவில் சூர்யா கொல்ல நினைக்கும் வில்லன் கோஷ்டியினர் இன்னொரு பக்கம் அவரைத் தேடியலைகின்றனர். முடிச்சுகள் அவிழ்ந்து சூர்யா தன் நோக்கத்தை நிறைவேற்றினாரா என்பது மீதி.

என்னமாய் நடிக்கிறார் சூர்யா? அடே.....ங்கப்பா..!!! நினைவிழப்பு உடையவராக வருகையில் ஒரு அறையைச் சுற்று முற்றும் பார்க்கும் போது பார்வை தொடர்ச்சியாக சுழலாமல், நிறுத்தி நிறுத்தி அவர் இங்குமங்கும் பார்ப்பதே நமக்கு 'ஜிவ்'வென்று இருக்கிறது. நடையும் அப்படியே ஒரு பரபரப்பு மிகுந்ததாய் 'சும்மா நச்சுனு இருக்கு'. சஞ்சய் ராமசாமியாக, ஒரு இளம் கோடீஸ்வரராகப் பட்டையைக் கிளப்புகிறார். என்ன அசத்தலான கம்பீரம்? பெங்களூர் திரையரங்குகளில் பெண்கள் பக்கமிருந்து செம விசில் சத்தம். 'சுட்டும் விழிச்சுடரே' பாடலில் தலையை அசைத்துக் கொண்டே அவர் ஆடும் அழகில் மனதைக் கொள்ளை கொள்கிறார். திரையரங்கில் இருக்கிற புகைப்பட/ஒளிப்பதிவு வசதி உள்ள செல்பேசிகள் அனைத்தும் திரையை முற்றுகையிட்டு அவரைச் சிறைப்படுத்திக் கொள்கின்றன. அத்தனை இனிமை!! (So Sweet!!)

தனக்கும் சூர்யாவுக்கும் காதல் என்று கிலோமீட்டர் கிலோமீட்டராய் ரீல் சுற்றும் அஸின் மேல் கோபம் கொண்டு, அவரைத் திட்டுவதற்காக வந்து, ஆனால் அவரது அழகிலும் துடுக்கான பேச்சிலும் மயங்கி கோபம் கொள்ள மறந்து, ஒரு மாதிரி வழிந்து விட்டுப் போகிறாரே ஒரு காட்சியில், அடடா, திரையில் என்னையே பார்த்த மாதிரி இருந்தது. ;-)))

கண்ணெதிரில் அஸினை வில்லன் அடித்துக் கொல்லும் போது, அவரைக் காப்பாற்ற முடியாத நிலையை நினைத்து ஏங்கி அழுகிறாரே, வாவ்! வெல்டன் சூர்யா.

சூர்யாவும் அஸினும் பார்த்துப் பழகி காதல் வயப்படும் முன் கதைக் காட்சிகள் அட்டகாசம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான காதலைத் திரையில் கண்டு ரசித்த திருப்தி எனக்கு. மிக மென்மையாகவும், மிக கலகலப்பாகவும் நகர்கின்றன இந்தக் காட்சிகள். இதனாலேயே இதை ஒரேடியாகக் காட்டாமல் பிரித்துப் பிரித்துத் தொகுத்திருப்பது படத்திற்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

அஸினுக்கு அருமையான, துடுக்குத் தனம் நிறைந்த, அழகான பாத்திரம். நிறைவாகச் செய்திருக்கிறார். முக சேஷ்டைகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். உயர உயாப் பறந்தாலும் அந்த விஷயத்தில் அஸின் 'ஜோ' ஆக முடியாது என்றாலும், நன்றாகவே ரசிக்கும் படியாகச் செய்திருக்கிறார்.

நயன் தாராவை நன்றாக உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவு தான் நாகரிகமாகச் சொல்ல முடியும். மருத்துவக் கல்லூரி மாணவி என்று சொல்கிறார்கள், ஆனால் ஒரு கலை விழாவில் அவர் ஆடுவது டூ, த்ரீ, ஃபோர், ஃபைவ், சிக்ஸ், செவன், எய்ட், நைன், டென் மச்..!!

முன் கதையை அழகாகச் சொன்ன அளவுக்கு நினைவிழப்பு தொடர்பான காட்சிகளையோ அல்லது சூர்யாவின் பழி வாங்கும் படலத்தையோ இறுக்கமாகச் சொல்லவில்லை. வில்லனை இரட்டைப் பிறவியாக்கி கொஞ்சம் புதுமை என்ற பெயரில் முயற்சி செய்திருந்தாலும் வெட்டியாக ஜல்லியடிப்பது மாதிரி ஒரு பிரமை தான் வருகிறது. மோசமில்லை, அதே சமயம் அற்புதமும் இல்லை.

சின்னச் சின்ன மின்னல்களாய் ஒரு சில காட்சிகள் 'அட' சொல்ல வைக்கின்றன. குறிப்பாக வில்லனின் தொழிற்சாலைக்குள் நயன் தாரா இருந்து கொண்டு சூர்யாவிடம் ஃபோனில் பேசுவது போன்று.

ஆனால் இந்தப் படத்திலும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கேணயர்களாக இருக்கிறார்கள். "இந்த நம்பர்ல பத்து இலக்கங்கள் இருக்கு. அதனால் இது ஒரு மொபைல் நம்பராத்தான் இருக்கணும்" போன்ற கண்டுபிடிப்புகளை அவர்கள் செய்யும் போது திரையரங்கில் சிரிப்பு மழை. ரியாஸ் கான் ஏதோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் பரிதாபமாக செத்துப் போகிறார். அதே போல் வில்லன், சூர்யாவின் பழைய நினைவுகளுக்கான சாட்சிகளாக வைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அழித்து விடுவதால் ஏதாவது புதுமையாக நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம்.

'சுட்டும் விழிச் சுடரே', 'ஒரு மாலை இளவெயில் நேரம்' ஆகிய இரண்டு பாடல்களும் கேட்கவும் இனிமையாய், பார்வைக்கும் அழகாய் இருக்கின்றன. இரண்டு நாயகிகளும் தனியே ஆடிப் பாடும் இரண்டு பாடல்களும் மகா தண்டம். பின்னணி இசையில் ஒன்றும் பிரமாதமாய் இல்லை.

இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமே என்ற ஆயாசத்தைக் கொஞ்சம் தருகிறது படம். இருந்தாலும் சூர்யாவின் நடிப்புகாகவும், அழகான காதலுக்காகவும், நல்ல முயற்சிக்காகவும் திரையரங்கில் பார்த்துப் பாராட்ட வேண்டிய படம்.

சொந்தச் சுவர் இல்லையென்றாலும் சித்திரத்தை அழகாகத் தான் வரைந்திருக்கிறார் முருகதாஸ். பாராட்டுக்கள்.

Rate movie மீனாக்ஸ் விமர்சனம்